
நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கும் நோக்கில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நேற்று (20) அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
வெவ்வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி முறைசாரா முறையில் வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி மற்றும் வெண்ணெய் (Avocado) போன்ற பழங்களைப் பழுக்க வைத்து சந்தையில் விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள், தற்போதுள்ள சட்ட நிலவரங்கள் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதில் உள்ள தடைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் இல்லாத நிலையில், கடுமையான சட்டத் தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியதுடன், இதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாயின் அது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments: