News Just In

7/17/2026 06:36:00 PM

'நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்.! வடக்கு மாகாண ஆளுநர்

'நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்' - வடக்கு மாகாண ஆளுநர்



'நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்' என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்:

இன்றைய தினம் புதிதாக நியமனம் பெறுபவர்கள் மற்றும் ஏற்கனவே சேவையில் உள்ளவர்களில் பதவியுயர்வு பெறுபவர்கள் என இரண்டு தரப்பினர் இங்குள்ளீர்கள். கடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள் இப்போது செயலாளர்களாகவும், ஆணையாளர்களாகவும் இங்கு வீற்றிருக்கிறார்கள். அன்றைய காலங்களில் அவர்கள் பணியாற்றிய போது பல்வேறு அரசியல் தலையீடுகளும் அழுத்தங்களும் இருந்தன. ஆனால், இன்று அவ்வாறான நிலைமை இல்லை. நீங்கள் மிகவும் சுதந்திரமாகப் பணியாற்றலாம்; ஆனால், நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்.

நீங்கள் நேர்மையாகப் பணியாற்றினால் நிச்சயமாக உங்கள் மீது அவதூறுகளைப் பரப்புவார்கள். உங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படும். பல்வேறு சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மக்கள் உங்களிடமிருந்து விரைவான, நட்பான, மற்றும் தரமான சேவையையே எதிர்பார்க்கின்றார்கள். எனவே, நீங்கள் நேரிய சிந்தனையுடன் விடயங்களை அணுக வேண்டும். உங்களை நாடி வருகின்ற ஒரு பொதுமகனுக்கு எவ்வாறு சேவையைச் செய்து கொடுக்கலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, அவரை எப்படித் தட்டிக் கழிக்கலாம் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பதவிக் கதிரையில் அமர்ந்ததும் சிலர் மறந்து விடுகின்றார்கள்; அந்த நிலைமை மாற வேண்டும்.

முன்னைய காலங்களில் அரச நியமனக் கடிதங்களில் 'இலங்கையின் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது 'வடக்கு மாகாணத்தில் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்' என நியமனக் கடிதங்களில் நிபந்தனை வழங்கப்படுகின்றது. ஆனால், இடமாற்றங்கள் வழங்கப்பட்டால் அதனை ஏற்க மறுக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. இது அரச சேவைக்குப் பொருத்தமற்றதொரு விடயமாகும்.

நீங்கள் சிறந்த தலைமைத்துவப் பண்புடன் பணியாற்றுங்கள். அந்தத் தலைமைத்துவப் பண்பு உங்களிடம் இருக்குமாக இருந்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட பணியிடங்களிலிருந்து உங்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே எமக்கு வராது. மக்கள் விரும்புகின்ற சிறந்த சேவையை நீங்கள் அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்,' என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் புதிய நியமனதாரர்களுக்கான வழிகாட்டல் அறிவுரைகளை வழங்கினர்.

முகாமைத்துவ சேவை அதிசிறப்புத் தரம்: 26 பேர் (இவர்களில் 11 பேர் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகவும், 15 பேர் நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்). வருமான வரிப் பரிசோதகர்கள்: 14 பேர். நூலகர்கள்: 02 பேர்.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர், அமைச்சின் உதவிச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: