News Just In

7/07/2026 07:33:00 PM

ஊழல்வாதியான ஹம்பாந்தோட்டை பொறியியலாளரை எவ்வாறு இங்கு நியமிப்பது?இரா சாணக்கியன்

ஊழல்வாதியான ஹம்பாந்தோட்டை பொறியியலாளரை எவ்வாறு இங்கு நியமிப்பது? இரா சாணக்கியன்


இன்றைய தினம் (07.07.2026) பாராளுமன்றத்தில் கனிய வளங்கள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு தொடர்பாக முக்கியமான விடயங்களை முன்வைத்தேன்.

மட்டக்களப்பு பொறியியலார் ஊழல் வாதி எனக்கூறி அதைவிட ஊழல்வாதியான ஹம்பாந்தோட்டை பொறியியலாளரை எவ்வாறு இங்கு நியமிப்பது?

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற Chamber of Commerce ஏற்பாடு செய்த கனிய வளங்கள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு தொடர்பான விசேட மாநாட்டில் அமைச்சர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். அந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் பின்னணியிலேயே நான் இன்று பாராளுமன்றத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பினேன்.

அமைச்சர் வழங்கிய பதிலில், "குறித்த திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான எந்தவிதமான மதிப்பாய்வும் மேற் கொள்ளப்படவில்லை" என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார். இது மிகவும் பாரதூரமானதும் கவலைக்கிடமானதுமான ஒப்புதலாகும்.

மேலும், இந்த விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பட்டியல் அரசிடம் இருப்பதாகவும், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல், சில நிறுவனங்கள் கனிம அகழ்வு அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி பங்குச் சந்தை வழியாக பெருமளவில் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் ஒப்புக்கொண்டார். இதன் மூலம் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நான் சுட்டிக்காட்டிய மற்றொரு முக்கிய விடயம் SCFR 137/2017 என்ற உச்ச நீதிமன்ற வழக்குத் தீர்ப்பாகும். அந்தத் தீர்ப்பில், அரசியலமைப்பின் 12ஆம் உறுப்புரையின் அடிப்படையில் அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய நடைமுறையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான நீண்டகால கனிம அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் GSMB நிறுவனம் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேற்கொண்ட கனிய வள ஆய்வுகளின் அடிப்படையில் தற்போது அகழ்வு அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாகும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் வாகரை போன்ற பகுதிகளில் இந்த நிலைமை தீவிரமாகக் காணப்படுகிறது.

எனவே, இதுவரை வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப் பத்திரங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக மீளாய்வு செய்யப்பட்டு, தேவையான இடங்களில் இரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

கனிய வளங்களையும் நீர் வளங்களையும் ஒரே நேரத்தில் அகழ்ந்தெடுத்தால், அவற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு கனிம அகழ்வு அனுமதிக்கும் முன்பாகவும் IEE (Initial Environmental Examination) மற்றும் EIA (Environmental Impact Assessment) ஆகிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

மேலும், ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தபோது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் GSMB பொறியியலாளர் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி, அனுமதிப் பத்திரம் பெற விரும்பியவர்களிடமிருந்து தலா 50,000 ரூபாய் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் சபையில் எடுத்துரைத்தேன்.

அதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்தில் GSMB அலுவலகத்தின் மூலம் நேரடியாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை. தரகர்கள் ஊடாகச் சென்றால்தான் அனுமதிப் பத்திரம் கிடைக்கிறது என்ற பாரிய குற்றச்சாட்டையும் பதிவு செய்தேன்.

வாழைச்சேனை மற்றும் ஆரையம்பதி பிரதேச சபைகள் GSMB நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைகள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், தனியார் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.

மேலும், அம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் நிராகரிக்கப்பட்ட GSMB அதிகாரியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமிக்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக நேர்மையுடனும் திறமையுடனும் செயல்படக்கூடிய புதிய பொறியியலாளரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.


எனவே, இதுவரை வழங்கப்பட்டுள்ள அனைத்து கனிம அகழ்வு அனுமதிப் பத்திரங்களும் உடனடியாக மீளாய்வு செய்யப்பட்டு, தேவையானவை இரத்து செய்யப்பட வேண்டும். மேலும், GSMB நிறுவனத்தின் நிர்வாகத்திலும் அனுமதி வழங்கும் நடைமுறையிலும் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, நான் முன்வைத்த அனைத்து விடயங்களுடனும் இணக்கம் இருப்பதாகத் தெரிவித்தார்.


மேலும், இதுவரை வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப் பத்திரங்களும் தற்போது விசேட குழுவொன்றினால் மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

நான் முன்வைத்த கவலைகளையும் பரிந்துரைகளையும் அமைச்சர் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டது, இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

No comments: