News Just In

7/02/2026 06:28:00 AM

கதிர்காம பாதயாத்திரை செல்லும் ‘சுப்பிரமணி’க்கு காட்டுப்பாதையில் செல்ல அனுமதி மறுப்பு!

கதிர்காம பாதயாத்திரை செல்லும் ‘சுப்பிரமணி’க்கு காட்டுப்பாதையில் செல்ல அனுமதி மறுப்பு



கதிர்காம பாதயாத்திரை செல்லும் ‘சுப்பிரமணி’க்கு காட்டுப்பாதையில் செல்ல அனுமதி மறுப்பு - வாகனத்தில் கொண்டு செல்ல சுற்றாடலியலாளர்கள் முடிவு!முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை குழுவினருடன் இணைந்து சுமார் 470 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்து வரும் ‘சுப்பிரமணி’ என்ற செல்லப்பிராணி (நாய்) சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மனிதர்களைப் போன்று மாமிசமற்ற உணவுகளை மட்டுமே உண்டு, தற்போது அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ள இந்தச் செல்லப்பிராணியை காட்டுப்பாதையினூடாக அழைத்துச் செல்ல வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி மறுத்துள்ளது.

​சுப்பிரமணியை காட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என பாதயாத்திரை குழுமத்தின் தலைவரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

​இது தொடர்பாக சுற்றாடலியலாளர் கந்தையா பிரியதர்சனி கருத்துத் தெரிவிக்கையில்,
​"குறித்த செல்லப்பிராணி பாதயாத்திரை செல்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடையல்ல. எனினும், காட்டிற்குள் பயணிக்கும் சக மனிதர்களின் பாதுகாப்பையும், அந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது." என்றார்.

​உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் இருவர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதுடன், இரண்டு செல்லப்பிராணிகளும் சிறுத்தை தாக்குதலால் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

இதனால் அங்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகிறது.

​எதிர்வரும் (09.07.2026)ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும், சுப்பிரமணியை சுற்றாடலியலாளர்கள் குழுவினர் தமது பொறுப்பில் எடுத்து, வாகனம் ஒன்றின் ஊடாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லவுள்ளனர்.

​அதன்பின், கதிர்காமத்திற்கான முனையமான 'பிள்ளையாரடி' எனப்படும் இடத்தில் வைத்து பாதயாத்திரை குழுவினரிடம் சுப்பிரமணி ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

No comments: