News Just In

6/29/2026 04:22:00 PM

மட்டக்களப்பு நகரின் நெரிசலைக்குறைத்த புதுப் பாலம் உடைந்து வாவிக்குள் விழுந்தது.உடனடியாகத் திருத்தியமைக்க பணிப்புரை!

மட்டக்களப்பு நகரின் நெரிசலைக்குறைத்த புதுப் பாலம் உடைந்து வாவிக்குள் விழுந்தது.உடனடியாகத் திருத்தியமைக்க பணிப்புரை
வாவிக்குள் உடைந்து விழுந்த புதுப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் ““Baily bridge”” ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகள்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு புளியந்தீவு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றாக இருந்து வந்த மட்டக்களப்பு புதுப் பாலம் சனிக்கிழமை மாலை திடீரென உடைந்து வாவிக்குள் விழுந்ததன் காரணமாக அந்த வீதி வழியாக இடம்பெற்று வந்த போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுப் போயுள்ளது.

மட்டக்களப்பு நகரின் நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவியாக இருந்து வந்த புதுப் பாலம் திடீரென உடைந்து வாவிக்குள் விழுந்துள்ளதனால் மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் புளியந்தீவு பழைய பாலம் நெருசலுக்குள்ளாகியுள்ளது.



பாலம் உடைந்து வாவிக்குள் விழுந்துள்ளதை அறிந்து கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுடன் அந்த இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி ஆகியோருடன் தொடர்பு கொண்டு பாலத்தை உடனடியாகத் திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதனடிப்படையில் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் ““Baily bridge”” ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உடைந்து விழுந்த புதுப் பாலத்தின் வழியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு விமான நிலையம், சிறைச்சாலை, பிரதான பாடசாலைகள், பிரதான பஸ் நிலையத்திற்குச் செல்வோர், மட்டக்களப்பு படுவான்கரைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வந்தனர்.

அத்துடன், வாழைச்சேனை தொடக்கம் ஏறாவூர் வரையுள்ள வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குத் துரிதமாக கொண்டு செல்லும் இடையூறு குறைவான பாதையாகவும் இருந்து வந்த புதுப் பாலம் உடைந்து விழுந்தமை மட்டக்களப்பு புளியந்தீவு நகருக்குள் போக்கு வரத்து நெரிசலை அதிகம் ஏற்படுத்தியுள்ளது.

No comments: