News Just In

7/25/2026 07:22:00 PM

“நாங்கள் அழமாட்டோம்” - அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ள பிரேசில் அதிபர் அதிரடி

“நாங்கள் அழமாட்டோம்” - அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ள பிரேசில் அதிபர் அதிரடி



பிரேசில் அதிபர் லூலா டா சில்வா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 25% வரிதிப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும், மாற்று சந்தைகளைத் தேடவும் பிரேசில் நடவடிக்கை எடுக்க உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா சில திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஏற்றுமதியாளர்கள் புதிய சர்வதேச வாடிக்கையாளர்களைக் கண்டறிய தனது அரசு உதவும் என்று தெரிவித்துள்ளார். பிரேசில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்து, வரி விதிப்பு என்பது அரசியல் காரணங்களினால் விதிக்கப்பட்டதே என்று கூறிய அதிபர் லூலா, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பாரபட்சமானவை என்று நிராகரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தொழில் துறைகளுக்கான நிதியுதவியை அரசு அறிவித்தபோது பேசிய லூலா, அமெரிக்கச் சந்தையை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை பிரேசிலுக்கு இருக்காது என்று கூறினார். “நாங்கள் விற்க முடியாத பொருட்களை நினைத்து அழுது கொண்டிருக்கப் போவதில்லை. ஏனெனில், அவற்றை வாங்கும் வேறு வாடிக்கையாளர்களை நாங்கள் தேடப் போகிறோம்,” என்று அவர் கூறினார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் நடவடிக்கையால் இழப்புகளைச் சந்திக்கும் நிறுவனங்களுக்கு சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க பிரேசில் திட்டமிட்டுள்ளது. நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், மாற்று ஏற்றுமதி சந்தைகளில் விரிவுபடுத்தவும் இந்த நிதி உதவும்.

அமெரிக்கப் பொருட்களுக்கு சமமான வரியை விதிக்கலாம் என்று லூலா முன்னதாகக் கூறியிருந்தாலும், பிரேசில் உடனடியாக பதிலடி வரி விதிக்காது என்று அந்நாட்டின் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் தெரிவித்தார். அதற்குப் பதிலாக, நீண்டகால வர்த்தக மோதலுக்கு நிறுவனங்களைத் தயார்படுத்திக் கொண்டே, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துவதில் பிரேசில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

“நாங்கள் பேச்சுவார்த்தை மேசையை விட்டு விலகப் போவதில்லை. பேச்சுவார்த்தை நடத்த விரும்பாதவர்கள் அவர்கள்தான்,” என்று லூலா கூறினார்.

அமெரிக்காவுக்குள் நுழையும் அனைத்து பிரேசில் பொருட்களுக்கும் இந்த வரி பொருந்தாது. மாட்டிறைச்சி, காபி மற்றும் விமான உதிரிபாகங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கச் சந்தைக்கான பிரேசிலின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி, புதிய வரிக்கு உட்படாமல் இருக்கும் என்று அட்லாண்டிக் கவுன்சில் ஆய்வாளர் வாலென்டினா சாடர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த நடவடிக்கை 11 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வர்த்தகத்தைப் பாதிக்கக் கூடும் என்று பிரேசிலுக்கான அமெரிக்க வர்த்தக சபை மதிப்பிட்டுள்ளது. இயந்திர உற்பத்தி, காலணி, மரம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்கள் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படக் கூடிய துறைகளாகக் கருதப்படுகின்றன.

அக்டோபரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு, இந்த வரி மோதல் பிரேசிலின் அரசியல் விவாதத்திலும் முக்கிய இடம்பிடித்து வருகிறது.

லத்தீன் அமெரிக்க அரசுகளுடன் ஏற்பட்ட மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்தொடர்ந்து வரிகளை அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் செலுத்தும் கருவியாகப் பயன்படுத்தி வருகிறார். முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் மகனும், ட்ரம்ப்பின் கூட்டாளியுமான வலதுசாரி செனட்டர் ஃபிளாவியோ போல்சனாரோவை லூலா எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசிலின் அரசியலமைப்பு ஒழுங்கைத் தகர்க்க முயன்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஜெயிர் போல்சனாரோ தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: