கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சவுதி அரேபியாவும் ஏமனும் இழுத்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
செங்கடல் கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏமனின் ஹொடைடாவில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும்,
வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலக்குகளை அழித்ததாகவும் சவுதி அரேபியா அறிவித்த மறுநாளான சனிக்கிழமையன்று, ஹவுதிகள் ஏவுகணைகளை ஏவியதில் சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
பொதுவாக 'ஹவுதிகள்' என்று அழைக்கப்படும் ஏமனின் 'அன்சார் அல்லாஹ்' அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், சவுதி அரேபியா ஹொடைடா மாகாணத்தில் உள்ள கமரன் தீவு மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்களுக்குச் சொந்தமான வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சவுதி எண்ணெய் கப்பல்கள் குறிவைக்கப்பட்ட ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான பாப் அல்-மந்தீப் நீரிணைக்கு அருகில் கமரான் தீவு அமைந்துள்ளதால், அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சவுதி கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது; ஹவுதிகளின் கடல்வழி முற்றுகையானது, ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதைத் தொடர்ந்து, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலாக மாறியது.
இந்த நிலையில், ஹொடைடாவில் உள்ள ராணுவ இலக்குகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் உள்ள எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களை மட்டுமல்லாமல்,
சவுதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் கட்டமைப்புகள், விமான நிலையங்கள், விமானப்படைத் தளங்கள் மற்றும் எண்ணெய் குழாய்த்தொடர்கள் ஆகியவற்றையும் குறிவைத்துத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவோம் என்று ஹவுதிகள் எச்சரித்திருந்தனர்.
தற்போது சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஃபார்ஸ்' (Fars) செய்தி முகமை வெளியிட்டுள்ள நாசா செயற்கைக்கோள் படங்களில், ஏவுகணைத் தாக்குதல்கள் ஜிசானில் உள்ள சவுதி அராம்கோவின் சேமிப்புக் கிடங்குகளில் தீ விபத்தை ஏற்படுத்தியதைக் காட்டியுள்ளன.

சனிக்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய அரம்கோ எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, யான்பு மற்றும் ஜசான் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏமனில் இருந்து அதிகாலையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்கள் காரணமாக, தெற்கு சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ரியாத் பல எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது
No comments: