News Just In

7/25/2026 07:28:00 PM

இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது!

இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது


இந்தியாவின் தனுஷ்கோடியில் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இரு இளைஞர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, விரைவில் காவல்துறை குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை காவல்துறையினருக்குத் தேவைப்பட்ட இரு குற்றவாளிகள் என்றும், வத்தளையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ள இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடந்த 23 ஆம் திகதி மன்னார் பகுதியிலிருந்து புறப்பட்டு தனுஷ்கோடியைச் சென்றடைந்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்த படகுப் பயணத்துக்காக மூன்று இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த வியாழக்கிழமை வத்தளை பகுதியில் 'குடு ரொஷான்' என்பவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என இலங்கை காவல்துறை சந்தேகிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதேவேளை, கணேசன் விக்னேஸ்வரன் என்பவர் 7 தடவைகள் இந்தியாவுக்கும்; மலேசியா, பிரான்ஸ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு தடவையும் சென்றுவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்கு அமைவாக, 2020 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வத்தளை காவல்துறையினராலும், 2020 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினராலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், மகேஸ்வரன் லூசிநாத் என்ற மற்றைய நபர், 2016 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நீர்கொழும்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவராவார்.

இந்தநிலையில், சந்தேகநபர்கள் இருவரும் தற்போது திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: