
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பாரிய ஆயுதக் கப்பல்கள் கரைக்கு வருவதற்கு முன்பதாகவே, நடுக்கடலில் வைத்து தாக்கி அழித்த நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய, அதி உயர் கௌரவத்திற்குரியவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இப்படிப் பெருமைக்குரிய ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியமை, இந்த அரசாங்கத்தின் குறுகிய அரசியல் பழிவாங்கலையே காட்டுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஹீரோக்களை நீதிமன்றங்களுக்கும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுக்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் இழுத்தடித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 04 ஆம் மாடியில் தடுத்து வைத்து அவமதிப்பதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அரசாங்கம் வழங்கும் முன்மாதிரி என்ன என்ற கேள்வி எழுகின்றது.
இந்த அரசாங்கத்துக்குச் சாதகமாக பேசும் சிலருக்கு இந்த வீரப் பதக்கங்கள் வெறும் தொங்கும் தகரங்களாகத் தோன்றலாம், அப்படியென்றால் அவர்கள் வாங்கிய சட்டப் பட்டப் படிப்பும் வெறும் காகிதக் கிழிசல் தான். அந்த ஒவ்வொரு பதக்கத்துக்குப் பின்னாலும் ஒரு வீர வரலாறு இருக்கிறது.
இன்று ஒரு தேசத்தின் ஹீரோக்களாக எப்போதும் மதிக்கப்பட வேண்டிய மனிதர்களை இவ்வாறு இழுத்தடித்து, அவமதித்து, பழிவாங்குவதைப் பார்த்துக் கொண்டு உணர்ச்சியற்ற ஒரு சமூகமாக இன்று நாம் மாறியுள்ளோம்.
இதன் மூலம் எந்தவொரு இனம் அல்லது மக்கள் கூட்டம் இனி இந்நாட்டுக்காக ஆபத்தை எதிர்கொள்ள முன்வருவார்கள்? அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டுத் தொழிற்சாலையை உருவாக்கி லேபல் ஒட்டுவதாலேயே ஒருவரைத் திருடன் என்று ஏற்றுக்கொள்ள முடியாது, அதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
No comments: