News Just In

7/25/2026 03:30:00 PM

ஒன்றிணைந்து செயற்படும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடிவு!

ஒன்றிணைந்து செயற்படும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடிவு!


தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரில் கலந்துரையாடுவதற்கு பிரதான தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்த மாதத் தொடக்கத்தில், இணைந்து செயற்படத் தீர்மானித்த 6 கட்சிகளின் பங்கேற்பில், நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த கலந்தரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஜனாதிபதி தமது பேச்சுவார்த்தைக் கோரிக்கைக்குச் சாதகமான பதிலளிப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள தலைவர்கள்; நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை அடையும் வரை இந்த இணைந்த பயணம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் நேரில் சந்திக்க இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகளுக்குப் பரந்தளவிலான ஆதரவையும் இணக்கப்பாட்டையும் திரட்டுவதே இந்த சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைந்து செயற்படத் தீர்மானித்த இந்த 6 கட்சிகளும், தமிழ் பேசும் மக்களின் உரிமைச் சார்ந்த விடயங்களில் தங்களது கூட்டுப் பயணத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஒவ்வொரு கட்சியும் தத்தமது தனித்துவமான அரசியல் கொள்கைகள், சுயாதீனம் மற்றும் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் அதேவேளை, பொதுக் கோரிக்கைகள் மற்றும் இணக்கப்பாடு காணப்படும் தேசிய விவகாரங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக மாத்திரம் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள்.

இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: