
வங்கதேச அதிபர் சஹாபுதீன் தனது பதவிக் காலம் முடிவ தற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கதேச அதிபராக கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்றவர் சஹாபுதீன்(76). இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் கூட்டணியில் இருந்தவர்.
வங்கதேசத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியவர். வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
ஆனால் சஹாபுதீன் அதிபர் பதவியில் தொடர்ந்தார். இப்பதவியில் சஹாபுதீன் நீடிப்பதை தற்போதைய பிரதமர் தாரிக் ரகுமான் தலைமையிலான அரசு விரும்பவில்லை என செய்திகள் வெளியாயின. இந்நிலையில் வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக சஹாபுதீன் அறிவித்துள்ளார்.
அவரது பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. ஆனால் மருத்துவ காரணங்களுக்காக அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தில் அவர், “உடல்நலம் சரியில்லாததால், அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம் நாடாளுமன்ற சபாநாயகர் ஹஃபிஜுதீன் அகமதுவிடம் வழங்கப்பட்டது. வங்கதேச அரசியல் சாசனப்படி, புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை, சபாநாயகர் தற்காலிக அதிபராக பொறுப்புவகிப்பார்.
No comments: