News Just In

7/07/2026 03:38:00 PM

காயங்கள் தடுப்பு வாரம் ஆரம்பம்: வீதி விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

காயங்கள் தடுப்பு வாரம் ஆரம்பம்: வீதி விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


நூருல் ஹுதா உமர்

காயங்கள் தடுப்பு வாரம் – 2026 (Injury Prevention Week 2026) நிகழ்வின் முதலாவது நாளை முன்னிட்டு, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில் வீதிப் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, வீதி விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாகக் காணப்படும் ஆபத்தான ஐந்து நடத்தைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக அதிவேகமாக வாகனம் செலுத்துதல், மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், வாகனங்களில் ஆசனப்பட்டை (Seat-belt) அணியாமல் பயணித்தல் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு இருக்கைகளைப் பயன்படுத்தாதது போன்ற செயல்கள் பாரிய விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

வீதிப் பாதுகாப்பு என்பது வாகன ஓட்டுநர்களின் பொறுப்பு மட்டுமன்றி, அனைத்து வீதிப் பயனாளர்களின் கூட்டுப் பொறுப்பாகும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தினர். சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலமும், பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாகப் பயன்படுத்துவதன் மூலமும் விபத்துகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில்லா சமூகத்தை உருவாக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments: