News Just In

6/01/2026 05:53:00 PM

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு


நூருல் ஹுதா உமர்

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில், கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல். தௌபீக் அவர்கள் தெரிவாகியுள்ளதுடன், மற்றொருவராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.ஜி. நிமல்சிறி பண்டார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவியுயர்வு, ஏ.எல். தௌபீக் அவர்களின் நீண்டகால கலாசாரப் பணிக்கான அங்கீகாரமாகவும், அம்பாரை மாவட்டத்திற்கு கிடைத்துள்ள ஒரு பெருமையாகவும் கருதப்படுகின்றது

No comments: