News Just In

6/02/2026 09:58:00 AM

எறிபந்து, கரம், ஹொக்கி சங்க பதிவுகள் இடைநிறுத்தம்; அதி விசேட வர்த்தமானி!

எறிபந்து, கரம், ஹொக்கி சங்க பதிவுகள் இடைநிறுத்தம்; அதி விசேட வர்த்தமானி!




இலங்கையின் மூன்று முக்கிய தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகப் பொறுப்புகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆம் பிரிவுகளின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படியே அமைச்சர் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2489/48) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த உத்தரவின் கீழ் பின்வரும் மூன்று தேசிய சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன:

இலங்கை கைப்பந்து சங்கம் (Handball)
இலங்கை கெரம் சங்கம் (Carrom)
இலங்கை ஹொக்கி சங்கம் (Hockey)

இந்த விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகம் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொது நடவடிக்கைகளைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்காக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் “தகுந்த அதிகாரியாக” (Competent Authority) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2026 மே 19 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கங்களின் தற்போதைய யாப்புகளை (Constitutions) திருத்தும் செயல்முறையை முழுமையாக்குதல் மற்றும் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செயல்முறையை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்தல் ஆகியவையே இந்த தற்காலிக இடைநிறுத்தத்திற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட புதிய யாப்புகளின் கீழ், வருடாந்தப் பொதுக்கூட்டங்களை (AGM) நடத்தி, முறையான தேர்தலின் மூலம் புதிய அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அந்தச் சங்கங்களின் அனைத்து செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் கையொப்பத்துடன், 2026 மே 19 ஆம் திகதியிடப்பட்டு இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: