News Just In

6/02/2026 09:48:00 AM

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு வியாபார நிலையங்களில் சுகாதார சோதனை

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு வியாபார நிலையங்களில் சுகாதார சோதனை



நூருல் ஹுதா உமர்

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று (01) நடைபெற்ற இறுதிநாள் திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மற்றும் நிரந்தர வியாபார நிலையங்களில் விசேட சுகாதார மற்றும் தரக் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனும், காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது உணவுப் பொருட்களின் தரம், சுகாதார நடைமுறைகள், விற்பனை சூழல், குடிநீர் வசதிகள் மற்றும் கழிவகற்றல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இந்நடவடிக்கையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றதுடன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்களும் நேரடியாகக் களமிறங்கி சோதனைகளில் ஈடுபட்டனர்.

விழாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: