News Just In

5/31/2026 01:08:00 PM

பாடசாலை மாணவர்களுக்கு HPV மற்றும் ADT தடுப்பூசி வழங்கல் : சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்பு

பாடசாலை மாணவர்களுக்கு HPV மற்றும் ADT தடுப்பூசி வழங்கல் : சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்பு


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள அல்-ஜலால் வித்தியாலயம் மற்றும் மல்ஹருல் ஷம்ஷ் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்கான HPV மற்றும் ADT தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயங்களிலிருந்து காக்கும் நோக்கில் இத்தடுப்பூசி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்வின் போது பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன், மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதன் மூலம் சமூகத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதோடு, எதிர்கால தலைமுறையின் ஆரோக்கிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது அமைகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அதிகாரிகளின் விளக்கத்தின்படி, ADT (Adult Diphtheria Tetanus) தடுப்பூசி டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. குறிப்பாக காயங்கள் மற்றும் தொற்றுகள் மூலம் ஏற்படக்கூடிய டெட்டனஸ் நோயைத் தடுக்கவும், சுவாசப்பாதையை பாதிக்கும் டிப்தீரியா தொற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

அதேவேளை, HPV (Human Papillomavirus) தடுப்பூசி பெண்களிடையே ஏற்படும் கருப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தை கணிசமாகக் குறைப்பதோடு, HPV வைரஸ் தொடர்பான சில பிற நோய்களிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. இளம் வயதிலேயே இத்தடுப்பூசி செலுத்தப்படும்போது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிர்கால தலைமுறையை நோய்களிலிருந்து பாதுகாக்கும் இந்த தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: