News Just In

5/31/2026 01:05:00 PM

நாட்டின் ஜனநாயகப் பயணத்தை வலுப்படுத்த மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.!

நாட்டின் ஜனநாயகப் பயணத்தை வலுப்படுத்த மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.


நூருல் ஹுதா உமர்

இலங்கை இன்று பொருளாதார மீட்சி, அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நீண்டகாலமாக செயலிழந்து காணப்படும் மாகாண சபை முறைமையை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது.

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தனது அறிக்கையில்,

கடந்த பல ஆண்டுகளாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிர்வாக அமைப்புகளாக இயங்கி வருகின்றன. இதன் காரணமாக மாகாண மக்களின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் அடிப்படை சேவைகள் தொடர்பான பல தீர்மானங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு பாரபட்சங்களும், முறைகேடுகளும் நடைபெறுகிறது.

மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ச்சியாக ஒத்திவைத்து வருவது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானது மட்டுமல்லாது, அரசியலமைப்பின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவ உரிமையையும் பாதிக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை தனது அரசியல் கொள்கைகளின் மையமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்து வந்துள்ளது. எனவே, அந்தக் கொள்கைகளின் நடைமுறை வெளிப்பாடாக மாகாண சபைத் தேர்தலை அறிவித்து நடத்துவது அரசாங்கத்தின் அரசியல் மற்றும் தார்மீகப் பொறுப்பாகும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் மக்களின் அபிலாஷைகள், பிராந்திய அபிவிருத்தித் தேவைகள் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்துடன் இணைந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு செயற்படும் மாகாண சபைகள் அவசியமாகின்றன. மத்திய அரசின் சுமையைக் குறைத்து, மக்களின் தேவைகளை அவர்களுக்கு நெருக்கமான நிர்வாக மட்டத்திலேயே தீர்க்கக்கூடிய அமைப்பாக மாகாண சபைகள் காணப்படுகின்றன.

நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும், பிராந்திய அபிவிருத்தியை சமநிலைப்படுத்தவும், மாகாணங்களின் செயற்பாட்டு பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். மக்கள் ஆணையைப் பெற்ற மாகாண நிர்வாகங்களே இந்தப் பணிகளை திறம்பட முன்னெடுக்க முடியும்.

எனவே, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய தெளிவான தேர்தல் அறிவிப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது மட்டுமன்றி, அதனை நடைமுறையில் உறுதிப்படுத்தும் அரசியல் துணிச்சலையும் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிர்வாக அமைப்புகள் எந்த நிலையிலும் ஜனநாயகத்திற்கு மாற்றாக அமைய முடியாது என்பதை நாம் நினைவூட்ட விரும்புகிறோம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது ஒரு அரசியல் தேவையாக மட்டுமல்ல; அது நாட்டின் ஜனநாயக எதிர்காலத்திற்கான அவசியமான தேசிய பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்

No comments: