நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும், வருடாந்த இப்தார் வைபவமும் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.
இதன் போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம், கல்முனை கல்வி வலயம் கடந்த காலங்களில் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதன் விளைவாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் பல்வேறு கல்விச் சாதனைகளைப் பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதும் வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு திட்டம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மேலும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், வரணியா சாந்தரூபன், எம்.என்.எம்.ஏ. மலிக், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் அனுசரணையில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர். இதன்போது கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் தேசிய மட்டத்துக்கு தெரிவானமையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது
No comments: