
வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முசல்குத்தி, வீரமாணிக்கங்குளம் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த பல குடும்பங்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். தற்போது அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற வரும்போது அதற்கு வனவளத்திணைக்களம் தடையாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (26) வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனவே இந்த பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர், ஏற்கனவே 293 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் காணிக்கான அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பதாகவும் , ஏற்கனவே 672 ஏக்கர் நிலங்களை விடுவிக்க வனவளத்திணைக்களம் ஒப்புதல் வழங்கியதாகவும், எனினும் 2024ம் ஆண்டு இந்தக்காணிகள் வனவளத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் வனவளத்திணைக்களம், பிரதேச செயலகம் என்பன விரைவில் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
No comments: