News Just In

2/16/2026 07:16:00 PM

மோடியின் விசேட அழைப்பில் நாளை இந்தியா பறக்கும் அநுர!

மோடியின் விசேட அழைப்பில் நாளை இந்தியா பறக்கும் அநுர!



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பையேற்று, 'AI Impact Summit 2026' சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (17) செவ்வாய்க்கிழமை மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மனிதகுலத்தின் நன்மைக்காகவும், பொறுப்புணர்வுடனும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமரின் தலைமையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்.

உலகளாவிய ரீதியில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

தனது இந்த ஐந்து நாள் விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் முக்கிய இருதரப்புப் பேச்சுகளையும் முன்னெடுக்கவுள்ளார்.

No comments: