News Just In

2/16/2026 05:14:00 PM

இந்தியா - பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் வைப்பது நிறுத்தப்பட வேண்டும்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் வைப்பது நிறுத்தப்பட வேண்டும்!



இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே சுதந்திரத்துக்கு பிறகே பல தலைமுறை ரசிகர்கள் ஒருவித பகை உணர்ச்சியுடன் பார்த்து வரும் பரம்பரை வைரி போட்டி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் இருதரப்பு தொடரில் ஆடும்போது ஒரு அணி வெற்றிவாகை சூடும். தோற்கும் அணி அடுத்த முறை வெற்றி முனைப்புடன் ஆடும். இந்த பகைமை கிரிக்கெட்டை அதன் நுணுக்கங்களின், போட்டித்தன்மையின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

“பாரம்பரிய வைரிகள்”- “பிளாக்பஸ்டர்” என்றெல்லாம் ஏதோ பாலிவுட், ஹாலிவுட் வீர சாகச நாயக பட ரிலீஸ் போல் மலை உயர ஹைப்கள் கொடுக்கப்பட்டு ஒளிபரப்பு ஊடகம் கட் அவுட் வைக்காத குறையாக கூவி கடைசியில் காத்திறக்கப்பட்ட பலூன் ஆகி விடுகிறது இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள். ஆகவே தயவு கூர்ந்து ஹைப்-ஐ நிறுத்துங்கள் என்பதே உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. யுஎஸ்ஏ அணிக்கு எதிரான போட்டி ஏற்படுத்திய சுவாரஸ்யம் கூட இந்தப் போட்டிகளில் இல்லை என்பதே கடும் எரிச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.

இப்போது இருதரப்புப் போட்டிகள் ஏறக்குறைய இல்லை என்ற நிலை வந்த பிறகு இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஒளிபரப்பு காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் கொடுக்கப்படும் தேவையில்லாத ஹைப் போலியாக உருவாக்கப்படுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் அணி அதற்கான, அந்த ஹைப்-ஐ நின்று தாங்கும் அணியாக இப்போது இல்லை.

மாறாக இந்திய அணி உலகின் நம்பர் 1 டி20 அணி. விளம்பர வருவாய்க்காகவும் டிஆர்பி ரேட்டிங்குக்காகவும் உருவாக்கப்படும் இந்த ஹைப் அருவருப்பின் உச்சத்துக்கு வந்து விட்டது, காரணம் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ஒரு காலத்தில் இருந்த அதன் கிரிக்கெட் நுட்பங்களின் சவாலின் சாரம்சங்களை இழந்து விட்டது. சமீபத்தில் ‘போங்கு’ போட்டியாக, சொத்தையாக செத்த போட்டியாக இருப்பதோடு தேவையற்ற விரோத பாவம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, கை கொடுக்க மாட்டோம் போன்ற விரோதப் போக்கு உலகக் கோப்பை போன்ற பல நாடுகள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் தொடரில், பலதரப்பு நாட்டு மக்களும் பார்க்கும் போட்டிகளில் அருவருக்கத்தக்க வெறுப்புணர்வைக் காட்சிப்படுத்துவதாக உள்ளது.

நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி இத்தகைய காட்சிப்படுத்தல்கள் கொண்ட போட்டியாக இருந்ததோடு சரி. பாகிஸ்தான் அணி எந்த வித சவாலையும் அளிக்கவில்லை. பந்து வீச்சில் ஆரம்பத்தில் அபிஷேக் சர்மாவை வீழ்த்திய போது கொஞ்சம் சவால் கொடுக்கும் போல் தெரிந்தது. ஆனால் அடுத்தடுத்து இந்திய அணி மேலாதிக்கம் செய்தது. இஷான் கிஷன் அற்புதமாக ஆடினார். அவர் தன் ஆஃப் திசை ஷாட்களை மேம்படுத்தியுள்ளார். பும்ராவின் அந்த யார்க்கர் எந்த வீரரும் ஆட முடியாததுதான். ஆனால், அடுத்தடுத்து பேட்டிங்கில் பும்ராவை ஏதோ நாங்கள் எதிர்த்து அடிக்கிறோம் பார் என்று படுமோசமான ஷாட்களை ஆடியது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணி ஹோம் ஒர்க் செய்தது போல் தெரிந்தது, ஆனால் பிற்பாடு அப்படி எதுவும் செய்யவில்லை என்பதைத்தான் அவர்கள் ஆட்டம் வெளிப்படுத்தியது. ஏனெனில், அக்சர் படேல் பந்து திரும்பாது ஆர்ம் பால் உள்ளே மட்டும்தான் ஒரு கோணத்தில் பேடுகளை நோக்கி வீசப்படும் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் பாபர் அஸம் போன்ற அனுபவசாலியே மட்டமான ஒரு ஸ்வீப் ஷாட் ஆடப்போய் பவுல்டு ஆகி வெளியேறுகிறார் என்றால் அந்த அணியை என்ன செய்வது? இத்தகைய ஆட்டத்திற்கு ஏன் இத்தனை ஹைப்? இதை ஜெயித்து விட்டு என்ன உலகக் கோப்பையை வெல்வதை விட இந்த வெற்றிதான் தலைசிறந்தது என்ற பேச்சுகள் என்றே கேட்கத் தோன்றுகிறது.

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ஒருதலைபட்சமாக மாறி வருகிறது. அதோடு ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே பிரிவில் போட்டு பணம் பண்ணும் போக்கு வெட்டவெளிச்சமாக அருவருப்புத் தன்மையுடன் வெளிப்படையாக உள்ளது. இரு அணிகளும் சம அணிகள் அல்ல என்பதை மறைத்து மக்களை ஏமாற்றும் ஹைப் போட்டிகளாக இவைகள் இப்போது உள்ளன. ஐசிசி இனியாவது ஒரே பிரிவில் இரு அணிகளையும் வைக்க வேண்டாம் என்பதே உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இஷான் கிஷன் அற்புதமாக ஆடினார், ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் பவுலர்கள், பீல்டர்கள், கேப்டன் ஒரு ஆதரவற்ற நிலையை, உடல் மொழியை, ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை வெளிப்படையாகவே காட்டினர். கடைசியில் முதலில் இஷான் கிஷன், பிறகு ரிங்கு சிங் என்று பாகிஸ்தானின் பிரதான பவுலர் ஷாஹின் அஃப்ரீடியை போட்டு சாத்தி எடுக்க அவரோ எந்த வித புது முயற்சியும் மாற்று முயற்சியும் இல்லாமல் வீசி, போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைப்பவராகவே வீசினார்.

176 ரன்கள் இலக்கை எதிர்த்து பவர் பிளேயிலேயே பாகிஸ்தான் தோற்று விடுகிறது, இதற்கு ஏன் இந்த போலி ஹைப்? 18 ஓவர்களில் போட்டி முடிந்து 61 ரன்கள் இடைவெளியில் பாகிஸ்தான் அந்தோ பரிதாபத் தோல்வி.

கிரிக்கெட் அளவுகோல்களின் படி இரு அணிகளுக்குமான இடைவெளி பெரும்பிளவாக உள்ளது. இனி இரு அணிகளையும் தயவு கூர்ந்து ஒரே பிரிவில் வைக்கக் கூடாது என்றே ஐசிசி-யை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

இரு அணிகளையும் வேறு வேறு பிரிவில் வைப்பது உண்மையில் பாகிஸ்தன் கிரிக்கெட்டை மேம்படுத்த உதவும். ஒவ்வொரு முறையும் இரு அணிகளையும் வைத்து நம்மைச் செய்து விடுகிறார்கள். இது சோர்வூட்டுவதாக இருப்பதோடு எந்த விதத்திலும் மனவளத்திற்கு உகந்ததாக இல்லை. ஐசிசி சிந்திக்க வேண்டும்.

No comments: