News Just In

1/25/2026 08:53:00 AM

தேசிய தலைமைத்துவ நிறுவனம் தொடக்க விழா: பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!

தேசிய தலைமைத்துவ நிறுவனம் தொடக்க விழா: பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு


நூருல் ஹுதா உமர்

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அமைக்கப்படவுள்ள தேசிய தலைமைத்துவ நிறுவனம் (National Institute of Leadership – NIL) தொடர்பான திட்டத்தின் தொடக்க விழா, இன்று (24) தமரசேரி நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

விழாவின் போது, ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனத்தின் தலைவர் முப்தி முஹம்மத் அப்துல் ஹக்கீம் அஷ்ஹரி, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனத்தின் முக்கிய அமைப்பாக தேசிய தலைமைத்துவ நிறுவனம் நிறுவப்படவுள்ளதுடன், ஆன்மீகம், கல்வி மற்றும் சமூகத் தலைமைத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்நிறுவனம் செயல்படவுள்ளது.

2001ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனம், இதுவரை பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களை உருவாக்கியுள்ளதுடன், அந்த நீண்ட பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகவே தேசிய தலைமைத்துவ நிறுவனம் கருதப்படுகிறது.

இந்நிகழ்வில், எகிப்து நாட்டை சேர்ந்த மார்க்க அறிஞர் ஷெய்க் அல்பத்ஹி மௌலானா, கேரளாவை சேர்ந்த கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆன்மிக விழுமியங்களோடும், அறிவார்ந்த சிந்தனையுடனும் கூடிய புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்குவதில் தேசிய தலைமைத்துவ நிறுவனம் முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கையும் இந்நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டது.

No comments: