அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளின் காரணமாக வன்முறை வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இது ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படை படையணி (Armada) நகர்த்தப்பட்டு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.
No comments: