
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக வடமாகாண ஆளுனரிடையே கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையில் நேற்றையதினம் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாகவும், இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
பனம்பழத்தில் இருந்து வைன் செய்வதற்கு தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமை தொடர்பில் கண்டுபிடிப்பாளர் விக்டர், ஆளுநருக்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன் இதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: