பாமகவின் செயல் தலைவராக தனது மகளை அறிவித்தார் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, தனது மகள் ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மண்ணில் 4 பேருடன் தொடங்கப்பட்ட பாமக இன்று மாநிலம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது. இந்தக் கட்சியின் ஓய்வறியா உழைப்பாளியாக ஜி.கே.மணி பணியாற்றுகிறார். சட்டப் பேரவையில் மக்களுக்காகவும், தொகுதிக்காகவும் பேசுகிறார். அதனால் தான் அவரை 4 முறை நீங்கள் எம்எல்ஏ-வாக தேர்வு செய்தீர்கள். பாமக-வின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு தருமபுரி மாவட்டத்துக்கு முதல் முறையாக வந்துள்ளார். அவர் தருமபுரிக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவார்.
பெருமைக்குரிய தருமபுரி மண்ணில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். பாமக-வின் செயல் தலைவர் பதவி காலியாக உள்ளது. அதை அவர் (அன்புமணி) ஏற்கவில்லை. எனவே, பாமக-வின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி பரசுராமனை அறிவிக்கிறேன். ஸ்ரீகாந்தி, பாமக-வுக்கும் எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அனைத்து சமூகங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமக-வின் கூட்டணியை நான்தான் அறிவிப்பேன். அது வெற்றிக் கூட்டணியாகவும் அமையும். வெகுவிரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
எதிர்பார்க்காத பதவி: ஸ்ரீகாந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அய்யாவுக்கு மிகவும் பிடித்த மண்ணில் இருந்து எனக்கு பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதவி கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. திடீரென முடிவெடுத்து அவர் இதை அறிவித்துள்ளார். அவரது கட்டளையை ஏற்று கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்படுவேன்’’ என்றார்.
No comments: