News Just In

7/13/2025 07:58:00 PM

காயத்துடன் உயிர் தப்பிய ஈரான் அதிபர் - பெஸெஷ்கியானை கொல்ல இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

காயத்துடன் உயிர் தப்பிய ஈரான் அதிபர் - பெஸெஷ்கியானை கொல்ல இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்



இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் பெஸெஷ்கியான் காயத்துடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, கடந்த ஜூன் 13 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி, ஈரான் மீது குண்டு வீசியது.

மேலும், ஈரானின் மூத்த ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட பலர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஈரானில், இஸ்ரேலின் உளவாளிகள் ஊடுருவியிருப்பதாலேயே துல்லிய தாக்குதல் நடத்தி கொல்ல முடிந்தாக ஈரான் கருதியது.

இந்நிலையில், ஈரான் அதிபர் பெஸெஷ்கியானை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் காயத்துடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில், ஈரான் உயர்மட்டத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஈரான் அதிபர் பெஸெஷ்கியான், நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், நீதித்துறைத் தலைவர் மொஹ்சேனி எஜே உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கட்டிடத்தின் வெளியேறும் வழிகளைத் தடுக்கும் வகையில் இஸ்ரேல் பல ஏவுகணைகளை வீசியுள்ளது. இதனை தொடர்ந்து கட்டிடத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈரான் முன்கூட்டியே அவசர கால திட்டம் வைத்திருந்ததால், அதன் மூலம் ஈரான் அதிபர் உள்ளிட்டோரை காப்பாற்ற முடிந்தது.

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பாணியில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கும் போது, ஈரான் அதிபர் பெஸெஷ்கியானின் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

"என்னை அவர்கள் கொல்ல முயற்சித்தார்கள். அதன்படி செயல்பட்டார்கள், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர்" என பெஸெஷ்கியான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது.

No comments: