News Just In

5/14/2025 12:45:00 PM

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமை குறித்து பொதுமக்கள் விசனம்!

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமை குறித்து பொதுமக்கள் விசனம்!


அபு அலா
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வாரம் ஒரு முறை மேற்கொள்ளப்பட்டுவரும் திண்மக்கழிவு அகற்றும் வேலைத்திட்டம் முறையாக மேற்கொள்ளப்படாமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கழிவகற்றும் வாகனங்கள் திண்மக்கழிவுகளை பெற்றுக்கொள்ள அடிக்கடி வராமல் இருப்பதால், வீதிகளில் வைக்கப்படும் கழிவுகள் கட்டாக்காலி மாடுகளால் சேதப்படுத்தப்பட்டு, வீதியெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், பாதசாரிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக, அரச பொது விடுமுறை தினங்களில் கழிவகற்றும் வேலைத்திட்டம் இடம்பெறாவிட்டால், அது பற்றி பிரதேச சபை - பள்ளிவாசல்கள் ஊடாக அல்லது குறுந்தகவல் மூலம் பொதுமக்களுக்கு முறையான அறிவித்தல்களை வழங்க வேண்டும். ஆனால், பிரதேச சபை இந்த விடயத்தில் தொடர்ந்தும் அலட்சியமாக இருந்து வருகிறது.

மேலும், வீதிகளிலுள்ள கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றதா என்பது குறித்து பிரதேச சபையால் எந்த கண்காணிப்பு ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 50 இற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் தொழிலாளர்கள் இருந்தும் தமிழ் சகோதரர்கள் கடமைக்கு வருகை தராத நாட்களில் முஸ்லிம் தொழிலாளர்களைப் பயன்படுத்தி கழிவு சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உரிய அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கழிவகற்றும் செயற்பாட்டு முறையில் தமிழ் தொழிலாளர்களுக்கொரு நியாயம், முஸ்லிம் தொழிலாளர்களுக்கொரு நியாயம் என்ற ரீதியில் இவ்வேலைகள் இடம்பெறுகின்றன. இதில் அநீதியான செயற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்விடயம் எந்தவகையில் நியாயம் என்ற கேள்விகளையும் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

எனவே தமிழ், முஸ்லிம் தொழிலாளர்கள் எல்லோரும் சமமாக பார்க்கப்பட்டு, திண்மக்கழிவுகள் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியிடம் அட்டாளைச்சேனை பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: