நடைபெற்று முடிந்த உள்ளுரதிகாரசபைத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபைக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட சிவம் பாக்கியநாதனை மாநகர முதல்வராக பதவி வகிக்க முழு ஆதரவையும் வழங்குவதென்று கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் இது தொடர்பான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநாத், ஆர். சாணக்கியன், என். சிறிநேசன் ஆகியோர் உட்பட உள்ளுரதிகார சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர்களும் அக்கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் இரண்டு வருடங்களுக்குப் பதவியை வகிக்க சிவம் பாக்கியநாதனும், அடுத்த இரு வருடங்களுக்கும் முதல்வராகப் பதவி வகிக்க துரைசிங்கம் மதன் என்பவரும் தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மாநகர முதல்வராகப் பதவியில் அமர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சிவம் பாக்கியநாதன், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல ஊடகவியலாளராவார்.
அத்துடன் அவர், முன்னர், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராகவும், சுகாதார நிலையியற் குழுவின் தலைவராகவும், மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சங்கத் தலைவராகவும் இருந்து பணியாற்றியுள்ளார்.
இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் காட்டாத அவரது சமூக சேவைப் பணிகளுக்காக சிவம் பாக்கியநாதன் ஏற்கெனவே, பொது அமைப்புக்களால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளுரதிகாரசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்காக உள்ள 34 உறுப்பினர்களில் 16 பேர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள். 9 பேர் தேசிய மக்கள் சக்தியையும், 4 பேர் சுயேச்சைக் குழுவினராகவும், 3 பேர் பிள்ளையானின் ரீஎம்வீபி கட்சி சார்பில் போனஸ் உறுப்பினர்களாகவும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பிர்களாகவும் உள்ளனர்
No comments: