News Just In

11/01/2024 03:26:00 PM

கிழக்கு மாகாணத்தில் சுமூகமான முறையில் தபால் மூல வாக்குப் பதிவு!

கிழக்கு மாகாணத்தில் சுமூகமான முறையில் தபால் மூல வாக்குப் பதிவு





நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான இன்றைய தினம், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில்சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஆகிய அரச திணைக்களங்களங்களில்
காலை 8.30 மணிக்கு முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியிருந்தது.
மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.ஏ.எம்.சுபியானின் மேற்பார்வையின் கீழ் வாக்களிப்புகள் இடம்பெற்றன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள், உற்சாகமான முறையில் தமது வாக்குகளைப் பதிவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 241 அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், தமது வாக்குகளை, பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்ட, தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்தனர்.

திருகோணமலை மாவட்டம் தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இன்று தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர். மிகுந்த உற்சாகத்துடன், தபால் மூல வாக்காளர்கள், வாக்களிப்பில் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன்
பங்கேற்றனர். ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர்.திரவியராஜ் தலைமையில் வாக்களிப்பும் பணிகள் நடைபெற்றன

No comments: