News Just In

11/25/2024 01:06:00 PM

மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ முகாம்; நிம்மதியான நினைவேந்தலை முன்னெடுக்க நடவடிக்கை - ஜீவராசா வேண்டுகோள்..!

மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ முகாம்; நிம்மதியான நினைவேந்தலை முன்னெடுக்க நடவடிக்கை - ஜீவராசா வேண்டுகோள்..!



மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றினாலேயே தமிழ் மக்கள் நிம்மதியான நினைவேந்தலை முன்னெடுக்க முடியுமென கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றையதினம்(25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவீரர்களை நினைவு கூறுவதில் இவ்வருடம் எந்தவித தடையும் இல்லை என்று தற்போதைய கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதை நாங்கள் வரவேற்கின்றோம். அவ்வாறு ஒரு செய்தியை வழங்கிவிட்டு இன்றும் பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் தமது பிரசன்னங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்களில் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளை செய்ய இயலாது இன்றும் பல துயிலும் இல்லங்கள் காணப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், விசுவமடு தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் இன்றுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.

ஏறத்தாழ 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இன்று வரையில் அஞ்சலி செலுத்த முடியாது அருகிலுள்ள ஒரு காணியிலேயே அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வினை செய்து வருகின்றோம்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் எந்த தடையும் இல்லை என அறிவித்த அமைச்சர், அம் மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடத்திலேயே அந்த அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு இராணுவத்தினரை வெளியேற்றி அந்த மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடத்திலேயே நாங்கள் எமது அஞ்சலியினை அமைதியாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்த தருமாறு வேண்டி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

No comments: