News Just In

11/26/2024 06:15:00 PM

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த தாய், சிசு விவகாரம்; கொட்டும் மழையிலும் வீதிக்கிறங்கிய ஊழியர்கள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த தாய், சிசு விவகாரம்; கொட்டும் மழையிலும் வீதிக்கிறங்கிய ஊழியர்கள்



மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றையதினம் மதியம் கொட்டும் மழையிலும் அடையாள கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை அமைதியான முறையில் மேற்கொண்டனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பில் இடம் பெற்ற போராட்டத்தின் போது,

மக்கள் உண்மைகளை அறியாது ஒட்டு மொத்த வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை செயற்பாடு தொடர்பில் அதிருப்தி அடைந்தமையினால் ஏற்பட்டுள்ள மன ரீதியான பாதிப்பு மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை மக்கள் அறிந்து கொள்ள செய்யும் விதமாக குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையின் போது தாங்கள் குறித்த சம்பவத்தின் போது இடம் பெற்ற முரண்பாடுகளான செயற்பாட்டினால் அப்போதும் இப்போதும் மெளனிகளாக்கப்பட்டுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக அனைவரும் கறுப்பு துணியினால் வாய்களை கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதே நேரம் ஊடகங்களே மக்களுக்கு உண்மையை உரையுங்கள், வன்முறைகளை தூண்டாதீர்கள், வைத்தியசாலை அது உங்கள் சொத்து அதை சேதப்படுத்தாதீர்கள்,

உயிர்காக்க போராட்டம் அதுதான் எங்கள் சேவையின் பிரதான நோக்கம், 100 பேர் செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் 50 பேர் செய்கின்றோம் அதை எப்போதாவது சிந்தித்தீர்களா,

வீண் பழி சுமத்தாதீர்கள் எங்கள் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஏதாவது செய்யுங்கள்,

போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

No comments: