News Just In

7/26/2024 04:17:00 PM

சுவர்ணபுரவர தேசிய விருதில் மாகாண மட்டத்தில் முதலிடமும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றது கல்முனை மாநகர சபை



(எம்.எம்.றம்ஸீன்)

நாட்டிலுள்ள மாநகர சபைகளுக்கிடையே நடாத்தப்பட்ட செயற்றிறன் மதிப்பீட்டில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்ட கல்முனை மாநகர சபைக்கு சுவர்ணபுரவர தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற சுவர்ணபுரவர தேசிய விருது விழாவின்போதே கல்முனை மாநகர சபைக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

உள்ளுராட்சி, மாகாண சபைகள் இராஜங்க அமைச்சர் ஜனக வக்கும்பர, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், உலக வங்கி மற்றும் ஆஷியா பவுண்டேஷன் என்பவற்றின் இலங்கைக்கான வதிவிடப் பிரிதிநிதிகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களிடம் இவ்விருதைப் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் மாகாண முதலமைச்சு மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருமான என். மணிவண்ணன் மற்றும் கல்முனை மாநகர சபையின் சார்பில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சாஹிர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபையானது மாகாண மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் வென்று இந்த விருதை பெறுவதற்கு காரணமாக அமைந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் கெளரவ முதல்வர் அவர்களுக்கும் முன்னாள் ஆணையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஆணையாளர் என்.எம். நௌபீஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments: