வங்கதேச வன்முறை: நாடு முழுவதும் ஊரடங்கு; கண்டதும் சுட உத்தரவு

வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊரடங்கை மேலும் நீட்டித்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தினால் நாடுதழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்க இருப்பதால், ஊரடங்கை மீறுபவர்களை பார்த்ததும் சுட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சுமார் 133 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த வன்முறை மற்றும் மோதல்களுக்கு வழிவகுத்த அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டைத் தொடர்வதா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து வங்கதேச உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு விடுதலைப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக படைவீரர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அந்த இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. முன்னதாக, 2018-ம் ஆண்டு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக வங்கதேச அரசு வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இடையில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை சிறிது நேரம் ஊரடங்கை தளர்த்தி இருந்தது. இதனிடையே, இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுபவர்களை பார்த்ததும் சுட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆளும் அவாமி லீக் கட்சி பொதுச்செயலாளர் ஒபைதுல் குவாட்டர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தும் அறிவிப்பை வங்கதேச அரசு அண்மையில் அறிவித்தது. இது பாரபட்சமானது என்றும் திறமை அடிப்படையில் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக போலீஸார் உட்பட 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை காலவரையின்றி மூட உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தின் இந்த அசாதரணமான சூழ்நிலை அங்குள்ள இந்திய மாணவர்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. சுமார் 1,000 இந்திய மாணவர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர்.
இதனிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை, அமெரிக்கர்கள் யாரும் வங்கதேசத்துக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள அசதாரண சூழல் காரணமாக சில தூதர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்றியுள்ளது.
படைவீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை பிரதமர் ஷேக் ஹசீனா ஆதரித்து பேசியதில் இருந்து மாணவர்களின் போராட்டம், மிகவும் தீவிரமடைந்தது. போராட்டத்தினை கட்டுப்படுத்த அரசு வியாழக்கிழமை முதல் இணைய சேவையை தடைசெய்திருக்கிறது.
படைவீரர்கள் அவர்களின் அரசியல் சார்பை பார்க்காமல் போரில் அவர்கள் செய்த பங்களிப்புக்காக உயரிய மரியாதைக்கு தகுதியானவர்கள் என்று தெரிவித்திருந்தார். கடந்த 2009ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் இடஒதுக்கீடு பற்றிய மனக்குறையில் இருந்து மிகப்பெரிய அளவிலான போராட்டமாக உருவாகியுள்ளது. தற்போதைய இந்தப் போராட்டம், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
No comments: