News Just In

7/12/2024 07:00:00 PM

19 கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்பார்ப்பு!



தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இந்நாட்டின் கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் நம்புகின்றோம். குறிப்பாக தொழிற் சந்தையை இலக்காகக் கொண்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நாட்டில் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்பார்க்கின்றோம். அந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்து 04 வருடங்களின் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் உருவாகுவார்கள். இதன் மூலம் தற்போது கல்வியியல் கல்லூரிகளில் இணையும் 5,000 மாணவர்களின் எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 7500 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவார்கள். மேலும், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக பாடசாலைகளில் உள்ள வசதிகளை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு பயிற்றுவிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை வழங்கப்படாத ஆசிரியர் நியமனங்கள், மூன்றாம் தர அதிபர் நியமனங்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் என்பனவும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளில் பணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பணம் அறவிடுவதைத் தடுக்க பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஆசிரியர் சேவை என்பது இந்நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் துறையாகும். மற்றவர்களை விட அவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. எனவே, தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். ஆனால், இந்தப் பணிப்பகிஷ்கரிப்புகள் தொடர்ந்தால் தொழிற்சங்கங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே, அவர்கள் வெவ்வேறு கதைகளைக் கூறினாலும், அவர்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தோல்வியடைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்

No comments: