News Just In

2/19/2024 07:16:00 PM

வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டியுடன் போராட்டம்!





இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரியும் மண் அனுமதி பத்திரம், கல்குவாரி அனுமதிப் பத்திரம் கோரிய சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் செங்கலடி பிரதேச செயலக வீதி ஓரத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சில மண் அனுமதி பத்திரம் வைத்துள்ளவர்களும், கல்குவாரி வைத்துள்ளவர்களும் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் மண் அனுமதி பத்திரம் வைத்துள்ளோம். ஆனால் தற்போது எமது மண் அனுமதி பத்திரம், கல்குவாரி அனுமதிப் பத்திரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

செங்கலடி பிரதேச செயலாளரிடம் கேட்டால் அபிவிருத்தி குழு தலைவரிடம் அனுமதி எடுத்தால் தான் மண் அனுமதி பத்திரம் வழங்க முடியும் என்கின்றனர். எனவே எமக்கான மண் அனுமதி பத்திரம் மற்றும் கல்குவாரி அனுமதிப் பத்திரத்தை வழங்க வேண்டும்.

மண் அனுமதி பத்திரத்தை நிறுத்தி வைத்துள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் அனுமதி பத்திரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் சவப்பெட்டிகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களிடம் வினாவியபோது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1350 மண் அனுமதி பத்திரங்கள் உள்ளது. இதனால் மாவட்டத்தின் கனிம வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்லாது விவசாய நிலங்கள் வீதிகள், முற்றாக அழிவடைகின்றது.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தது இங்குள்ள வயல் நிலங்களை பலர் அழித்துள்ளனர். கடந்த காலங்களில் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்ட காணிகள் குளங்களாக மாறியுள்ளது.

இவற்றை எல்லாம் சீர் செய்தால் மாத்திரமே மண் அனுமதி பத்திரம் வழங்க முடியும் என பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் சில மண் மாபியாக்கள் இந்த மாவட்ட மண்ணை விற்பனை செய்வதற்காக எந்த அளவுக்கும் செல்ல தயாராக உள்ளனர். அந்த அடிப்படையில் இவ்வாறான போராட்டங்களை செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

No comments: