News Just In

6/17/2023 09:41:00 PM

ஊடக நெறிமுறை தொடர்பான பயிற்சி பட்டறை!




நூருல் ஹுதா உமர்

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் சுவீடனை தலைமையகமாக கொண்ட டயகோனியா நிறுவன அனுசரனையில் 'சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் ஒன்றிணைதல்' எனும் தொனிப்பொருளில் தமிழ்மொழி மூல ஒரு நாள் பயிற்சி பட்டறை மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சமூகம், சமயம், அரசியல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர் என பல்லின ஆண்கள் பெண்கள் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியான நிகழ்வுகளில் வளவாளராக பணியாற்றும் கலாநிதி. எம்.சி.றஸ்மின் வளவாளராகவும், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் துணை வளவாளராகவும் கலந்து பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்விற்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. அஸ்லம் சஜா அவர்கள் தலைமை தாங்கினார்

கருத்து வேற்றுமை, தனியுரிமை, பரபரப்பு, அநாமோதய தகவல் மூலங்கள், சமூக ஊடகம் மற்றும் உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களை மையமாக வைத்து இதன்போது வளவாளரால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், சமூக ஊடகம் மற்றும் இலத்திரணியல் ஊடகம் போன்றவற்றின் நெறிமுறைகள் குறித்தான விரிவான விடயங்கள் ஆராயப்பட்டதுடன் மேற்படி நெறிமுறைகள் தொடர்பில் பங்குபற்றியோரிடமிருந்து கருந்துகள் பெறப்பட்டு எதிர்காலத்தில் பிராந்திய ரீதியாக ஊடக நெறிமுறைகளை ஊக்குவிக்கும் செயற்திட்டமும் வரையப்பட்டது.

தவறான தகவல், பரபரப்பு தகவல், புனைதல், போலியான தகவல், சரிபார்ப்பு இல்லாமை, தகவல்களை உறுதிப்படுத்தாமை, வெறுக்கத்தக்க பேச்சுகளைப் பரப்புதல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இன்னோரன்ன விடயதானங்களை நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில் நெறிமுறை உட்குறிப்பு, ஊடக நெறிமுறையில் வித்தியசமான அணுகுமுறைகளைக் கையாளுதல், நெறிமுறையைப் பின்பற்றுவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அதற்கு முன்னோக்கியதான பாதை அத்துடன் எதிர்காலத்திற்கான சிபாரிசுகள் போன்ற விடயங்களில் பங்குபற்றுனர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவை குறித்து விரிவாகப் பேசப்பட்ட சிறப்பான ஊடக நெறிமுறை தொடர்பான பயிற்சி பட்டறையாக இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் இப்பயிற்சி பயிற்சி பட்டறையை நடாத்துவதற்கான ஏற்பாட்டை சமூக அபிவிருத்தி மன்றம் முன்னெடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: