News Just In

12/16/2022 02:29:00 PM

புலிகளின் வேலைத்திட்டத்தை சுமந்திரனும் சாணக்கியனும் முன்னெடுக்கின்றனர் – தெற்கில் கிளம்பிய எதிர்ப்பு!




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணயக்கியனுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து தூதரகத்திற்கு முன்பாக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் அதிகாரப் பகிர்வின் ஊடாக அதிகாரப் பரவலாக்கல் எனும் தொணிப்பொருளிள் தெற்கில் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

சமஷ்டி தொடர்பாக தெற்கில் நிலவிவரும் பிழையான கண்ணோட்டத்தை இல்லாது செய்து, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் அமைந்திருந்தது.

இதன் ஓர் அங்கமாக அண்மையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவிட்ஸர்லாந்து தூதுவரையும் சந்தித்து, கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிடும்வகையிலேயே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கள இராவய மற்றும் அப்பே ஜனதா பக்ஷய எனும் கட்சியினராலேயே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டக்காரர்கள், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எடுக்கும் இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் ஒத்துழைக்கக்கூடாது என்றும் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு நாட்டில் இடமில்லை என்றும் தூதுரகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டுள்ள இந்தியாவே இன்னும் வளர்ச்சியடையாத நாடாகத்தான் காணப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, வடக்கு- கிழக்கில் இராணுவக்குறைப்புக்காக சுமந்திரன்- சாணக்கியன் போன்றோர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் இவர்கள் இதன்போது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலைத்திட்டமென்றும் தெரிவித்துள்ளனர்.

No comments: