News Just In

12/16/2022 06:51:00 PM

நாட்டிற்கான பொதுவான திட்டங்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்: இரா.சாணக்கியன்!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைவேறு, தெற்கு மக்களின் பிரச்சினைவேறு. நாட்டிற்கான பொதுவான திட்டங்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, "கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பாடசாலைகள் ஒரு சில பாடசாலைகள் மாற்றப்பட்டு இன்று அந்த தேசிய பாடசாலைகள் என்பது ஒரு பெயர் பலகையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் எங்களின் கைகளில் வழங்கப்பட வேண்டும்.தெற்குக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் வடக்கு கிழக்குக்கு பொருத்தமாக அமையாது.

வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினை ஏனைய பகுதிகளில் மக்களின் பிரச்சினைகளில் வேறுபட்டதை அரசாங்கம் உணர வேண்டும். தற்போது ஜனாதிபதி உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கான வேலைத்திட்டத்தினை உருவாக்கியுள்ளார்.

அது தான் வட்டாரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கை என்ற பெயரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முறையான வகையில் மீளாய்வு செய்யப்படாமல் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. தெற்கில் நான்கு ஐந்து வட்டாரங்களை வைத்துக்கொண்டு நகரசபையாக இயங்கும் இடங்களும் உண்டு.

ஆனால் கிழக்கில் தமிழ் பகுதிகளில் கூடுதலான வட்டாரங்களைக்கொண்டு மாநகரசபைகளும் பிரதேசசபைகளும் இயங்குகின்றது. சில பிரதேசசபைகளை இரண்டு பிரதேசசபைகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துவரும் நிலையில் வட்டாரங்களை குறைத்து மேற்கொள்ளப்படும் சீரமைப்பு தமிழ் மக்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும்.

வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினையென்பது மாறுபட்டதாகும். நாடு முழுவதும் பொதுவான தீர்மானங்கள் எடுக்கும்போது தமிழ் மக்கள் அதனால் பாதிக்கப்படுகின்றார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்த வரையில் அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் கூட தெரியாதவர்களாகவே அக்கட்சியினர் உள்ளனர்.

அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அறிவதற்கு ஆவலாகயிருக்கின்றோம்.அவர்களின் ஒரேயொரு நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியலிலிருந்து ஒதுக்கிவிட்டு அதன் பின்னர் தங்களது அரசியல் நிலைப்பாடை அறிவிக்கும் வகையிலேயே அவர்களது திட்டம் உள்ளது.

ஒரு நாட்டின் ஜனாதிபதியுடன் பேசாமல் அமெரிக்க ஜனாதிபதி அவர்களை அழைத்துப்பேசுவார் என்ற நினைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளனரோ தெரியாது.இவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன.

சரத் வீரசேகர போன்ற இனவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்கின்றார் மாகாணசபையினை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்.

இதே கொள்கையுடனேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமாரும் செல்வராஜா கஜேந்திரனும் உள்ளனர். இதனை வலியுறுத்தி வடக்கு கிழக்கு எங்கும் சவப்பெட்டியை வைத்து ஊர்வலம் சென்றார்கள்.

அரசியல் தீர்வினை 13வது அரசியலமைப்புக்குள் முடக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.13வது திருத்த சட்டத்தில் உள்ள மாகாணசபை முறைமையினைக்கொண்டு அதனை நாங்கள் இன்னும் பலப்படுத்தவேண்டும்.

மாகாணசபை முறைமையில் பிழைகள் உள்ளது. அதனை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இவர்கள் எதுவும் வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.” என்றார்.




No comments: