News Just In

10/24/2022 07:04:00 PM

சிந்தனைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து ஆக்கபூர்வமான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து அதனை அமுல்படுத்தி நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.





செய்தியாளர் - ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாம் சிந்தனைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து ஆக்கபூர்வமான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து அதனை அமுல்படுத்தி நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்தியை பிரதேசத்தில் ஏற்படுத்த வேண்டும் என திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைச் செயலாளர் நரேந்திரநாத் யாழினி தெரிவித்தார்.

பிரதேச மக்களது திட்ட முன் மொழிவுகளை உள்வாங்கி வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பயிற்சிச் செயலமர் சனி ஞாயிறு (22, 23 )ஆகிய இரு தினங்களிலும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உப்புவெளி உப அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

செயலாளர் யாழினி தலைமையில் இடம்பெற்ற இந்த பயிற்சிச் செயலமர்வில் அப்பிரதேச சபையின் சிரேஷ்ட உள்ளுராட்சி உதவியாளர் கே. தயானந்தன், உறுப்பினர்களான பி.பி. ஸ்ரீயானி, எஸ். விபுசன், கே. தங்கராசா உட்பட பிரதேச சபையின் அலுவலர்கள், வட்டாரங்களிலுள்ள சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பெண்கள் இளைஞர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சிச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து மேலும் உரையாற்றிய பிரதேச சபையின் செயலாளர் யாழினி, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்திர் பிரதேச சபையுடன் இணைந்து தொடர்ச்சியாக மக்களையும் பிரதேச சபை நிருவாகத்தையும் வலுவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு சாராரினதும் எதிர்பார்ப்பு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதாக மக்களின் முழுமையான பங்குபற்றலை அதிகரிக்கச் செய்வதுதான்.

முன்னைய காலங்களில் நிருவாகத்திலுள்ளவர்கள் மாத்திரம் கூடித் தயாரிக்கும் வரவு செலவுத் திட்ட நடைமுறை இருந்து வந்தது.

அதிலே பிரதேச மக்களின் கருத்துக்கள், தேவைகள், முன்னுரிமைச் சேவைகள் கருத்திற் கொள்ளப்பட்டிருக்க மாட்டாது.

இந்த நடைமுறையை தொடர்ந்து அவ்வாறே கடைப்பிடிக்காமல் மக்கள் கருத்தறிந்து தயாரிக்க வேண்டும் என்ற கருத்தும் கொள்கை மாற்றமும் இப்பொழுது வந்துள்ளது.

அரசினால் இதற்கான அறிவுறுத்தல்கள் வந்த வண்ணமே உள்ளன. அதனடிப்படையிலேயே இத்தகைய பயிற்சிச் செயலமர்கள் பிரதேச மக்களையும், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களையும், உள்ளுராட்சி நிருவாகத்தினரையும் இணைத்ததாக நடத்தப்பட்டு வருகின்றது.

தெளிவான சாத்தியப்பாடான வினைத்திறனான வரவு செலவுத் திட்டம் மக்களின் முழுமையான கருத்துக்களையும் தேவைகளையும் உள்வாங்கியதாக தயாரிக்கப்படும் பொழுது அது வெற்றியடையும்.

ஆகையினால் நாம் சிந்தனைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து ஆக்கபூர்வமான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து அதனை அமுல்படுத்தி நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்தியை பிரதேசத்தில் ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.

பயிற்சிச் செயலமர்வின் இறுதியில் மக்கள் பங்கேற்புடனான வரவு செலவுத் திட்டத்திற்காக பிரதேச மக்களால் முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் அடையாளம் காணப்பட்டு பிரதேச சபை செயலாளர், உள்ளுராட்சி உதவியாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட நிருவாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வேலாயுதம் மோகனின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் உள்ளுராட்சித் திணைக்கள சிரேஷ்ட சமூக அபிவிருத்தி அலுவலர் சட்டத்தரணி அன்பழகன் குறூஸ் வளவாளராகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். யூ.எஸ். எய்ட் சர்வதேச உதவி அமைப்பு இத்திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்கி வருகின்றது.

பிரதேச சபைகளுக்குக் கிடைக்கக் கூடிய நிதி, அச்சபை கொண்டுள்ள பௌதீக, மனித வளங்களை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்தி பிரதேச மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் செயற்திட்டமாக இந்த செயலமர்வுகளை இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வ உதவு ஊக்க அமைப்பு நடத்தி வருகின்றது.


No comments: