News Just In

8/12/2022 08:19:00 PM

மட்டு மாநகர சபையினால் அமைக்கப்படவுள்ள பல் உணவு அங்காடிக்கான அடிக்கல் இன்று நட்டு வைக்கப்பட்டது!

உல்லாசப் பிரயாண துறையை ஊக்குவிக்கும் வகையிலும், மட்டக்களப்பின் பாரம்பரிய உணவுகளை சந்தைப்படுத்திக்கொள்ளும் நோக்கிலுமாக உலக வங்கியின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள பல் உணவு அங்காடிக்கான (Multi food center) அடிக்கல் நடும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபையின் 10 ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று (12) இடம்பெற்றது.

நாட்டின் தற்கால பொருளாதார நெருக்கடி நிலமைகளை கருத்திற்கொண்டு உல்லாச பயணிகளை கவரும் விதத்தில் மட்டக்களப்பின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளை சந்தைப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக மட்டக்களப்பு மாநகர சபையானது, உலக வங்கியின் “உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின்" ஊடாக சுமார் 6 மில்லியன் ரூபாய் செலவில் பல் உணவு அங்காடியானது (Multi food center) நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு நகரில் அமைந்துள்ள "கைலாசா உணவகத்தினை" ஒத்ததாக பல வகையான உணவுகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் மேற்படி பல் உணவு அங்காடியானது அமையப்பெறவுள்ளதாகவும், இதன் ஊடாக உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிக்கும் அதேவேளை உள்ளூர் இளைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க கூடியதாகவும் இருக்கும் என இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

மேலும் உணவகம் அமையப்பெறவுள்ள இடமானது குப்பை குழங்கள் நிறைந்து காடு மண்டி காணப்படுவதாகவும், இரவு வேளைகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் முறையிட்டு வருகின்றனர். எனவே இத் திட்டத்தின் ஊடாக இவ்வாறான செயற்பாடுகள் தடுக்கப்படுவதோடு, நகர் பகுதியும் இரவு வேளைகளிலும் இயங்கு நிலையில் இருக்கும் எனவும் தான் எதிர்பார்ப்பதாகவும் இதற்கு போது மக்களும் தமது ஒத்துழைப்புக்களை மாநகர சபைக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆர்.சுதர்சன் உள்ளிட்டவர்களுடன் பிரதேச மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: