News Just In

8/26/2022 07:46:00 PM

வாகன விபத்தில் வயோதிப பெண் மரணம், பால் புறைக்கேறி சிசு மரணம்!

வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தாய் பால் புறைக்கேறியதில் சிசு ஒன்று மணரமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் இருந்து பரந்தன் நோக்கி சென்ற காரும், திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சீமெந்து ஏற்றி வந்த லொறியும் வாகரைப் பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிய நிலையில் காரில் பயணித்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் அம்மன் ஆலய வீதி கல்முனையைச் சேர்ந்த எம்.பார்வதி (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், குறித்த நபரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

லண்டனின் இருந்து வந்த குடும்பத்தினர் தனது கல்முனையில் உள்ள தனது தாயின் வீட்டில் இருந்து தனது கணவரின் உறவினர்களை பார்ப்பதற்காக கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் பரந்தனை நோக்கி சென்ற வேளை வாகரை பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பகுதியினைச் சேர்ந்த 38 நாள் சிசு பால் புறைக்கேறிய நிலையில் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி காவத்தமுனை கெல்பேச் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் 38 நாட்களை கொண்ட அனஸ் சம்கி அஹமட் என்ற பச்சிளம் குழந்தை பால் புறைக்கேறியதில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

வெள்ளிக்கிழமை அதிகாலை பால் அருந்திய குழந்தையை காலையில் தூக்கிப் பார்த்த போது குழந்தைக்கு மூச்சு இல்லாத நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் சிசுவின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments: