News Just In

8/10/2022 10:36:00 AM

கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும் - ஹாபிஸ் நஸீர்




தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும். அத்துடன் மறைமுகமாக ஜனாதிபதியை சந்தித்து அமைச்சு பதவியை கேட்பதை விடுத்து அமைச்சுப் பதவிகள் மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும் கேட்டுப்பெற அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வரலாற்றில் நடக்காத ஒன்றை நிலைநாட்டியுள்ளார். அது அவரது சாணக்கியத்தையும் அரசியல் அனுபவத்தையும் காட்டுகிறது. 134 எம்.பிகளினால் அவர் தெரிவாகியுள்ளார்.

அனைத்து கட்சிகளில் இருந்தும் அவருக்கு வாக்கு அளிக்கப்பட்டன. அதில் ஒரு கட்சி மாத்திரம் தான் தனது 3 வாக்குகளையும் எதிராக வாக்களித்தது.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார். எந்தத் தரப்பில் இருந்தாலும் குட்டிச்சுவராக இருக்கும் நாட்டைகட்டியெழுப்ப எதிரணி பங்களிக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார்.சாணக்கியன் எம்.பிக்கு மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியுடன் நிறைய தொடர்பு இருந்ததாக சுமந்திரன் கூறியிருந்தார்.இதனை தவறாக பார்க்கவில்லை. அவர்களின் காய்நகர்த்தல்களை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.

அத்துடன் அவர்கள் ஆட்சியில் உள்ளவர்களை எதிர்த்துப் பேசினாலும் ஆட்சியில் உள்ளவர்களுடன் சாணக்கியத்துடன் நிதானமாக காய்நகர்த்தினார்கள்.

முஸ்லிம் கட்சி தலைவர்கள் தவிர அநேக எம்.பிகள் ஜனாதிபதிக்காக வாக்களித்தார்கள். இவர்கள் மறைமுகமாக ஜனாதிபதியை சந்தித்து அமைச்சு பதவியை கேட்பதை விடுத்து அமைச்சுப் பதவிகள் மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும் கேட்டுப் பெற அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்று கோருகிறேன்.

அது ரிசாத் எம்.பியாக இருந்தாலும் சரி ஹக்கீம் எம்.பியாக இருந்தாலும் சரி அவர்கள் நேரடியாக வந்து பேச வேண்டும்.

ஹக்கீமும் நிசாம் காரியப்பரும் ஜனாதிபதியை சந்திப்பதாக அறிந்தேன்.பல விடயங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கையின் நாடு இருக்கும் நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட வேண்டும்.

வெறுமனே போராட்டங்களின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.போராட்டம் நியாயமாக இருந்தாலும் பிரச்சினைகளை உரிய அமைச்சர்களுக்கு முன்வைத்து தீர்வு காண முற்பட வேண்டும்.என்றார்

No comments: