News Just In

3/24/2022 05:44:00 AM

வீதி விபத்துக்களைத் தடுக்க பயிலுனர் பயிற்சிக் கையேடு வெளியீடு



ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக பயிலுனர் பயிற்சி நூல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் மட்டக்களப்ப மாவட்ட செயலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வைத்திய கலாநிதி பா. ஜுடி ரமேஸ் ஜெயகுமாரினால் எழுதப்பட்ட எங்கள் உயிர் எங்கள் கைகளில் எனும் தலைப்பிலான பயிலுனர் பயிற்சி நூல் இம்மாவட்டத்தில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் அனர்த்தங்கள் குறைப்பதற்காகவும், வாகனத்தை செலுத்துபவர்கள் மற்றும் புதிதாக வாகனம் செலுத்துபவர்களுக்கு வழிகாட்டல்கள், வீதி பாதுகாப்பு பொறிமுறைகள் உள்ளடங்கிய பயிற்சி நூலாக அமையப் பெற்றுள்ளது.

வெளியிடப்பட்ட இந்நூலில் வாகனத்தை செலுத்துபவர்கள், பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், துவிச்சக்கர வண்டி செலுத்துனர்கள், போக்குவரத்து பொலிசார், பாடசாலை மற்றும் கல்வி பணிப்பாளர்கள், காவல்துறையினர்களின் வகிபாகங்கள் பற்றியும் விபத்தின்போதும், விபத்தின் பின்னருமான முதலுதலி மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான விடயங்கள் உரிய தரப்பினர்களின் வகிபாகங்கள் பற்றியும் தெழிவூட்டப்பட்டுள்ளன.

இந்நூல் வெளியீட்டின்போது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப், சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர். பீ. ஜீபரா, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் டாக்டர் ஜீ. விவேகானந்தராஜா, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இதன்போது வீதி விபத்துகள் மற்றும் சிகிச்சை தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் ஆகியோர்களால் விழிப்புனர்வு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுகாதார துறை வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள, கல்வித்திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.




No comments: