News Just In

6/20/2021 08:19:00 PM

மட்டக்களப்பில் நாளை பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பில்- அரசாங்க அதிபரின் அறிவிப்பு...!!


(மட்டக்களப்பு அப்துல் லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் 19 நிலைமை கடந்த சில தினங்களாக சடுதியாக அதிகரித்து வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது எனவே நாளை பயணக் கட்டுப்பாடும் நீக்கப்பட்டாலும் இம்மாவட்ட மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
நாளை அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் முகக் கவசங்கள் அணிதல் சமூக இடைவெளி பேணுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக கவனம் செலுத்தப் பட வேண்டும்.

இதனை பொலீசாரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும் அவதானிப்பர். பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டது என்ற எண்ணத்துடன் சடுதியாக வெளியில் வந்து கூட்டமாக ஒன்று சேருதல் சுகாதாரதரப்பினருக்கும் பொலிஸாருக்கும் அனாவசியமான தொந்தரவுகளை ஏற்படுத்தாமல் பொதுமக்கள் மிகவும் அவதானமாக தங்கள் கருமங்களை ஆற்றிக் கொள்ள வேண்டு மென பொதுமக்களை வேண்டுகிறேன்.

எமதுமாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஆறு கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா மூன்று கிராமங்கள் வீதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருந்த ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவின் இரண்டு கிராமங்கள் நாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கபடுகிறது.

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய சாதாரண நிலை காணப்படும் ஆனால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது இருந்தாலும் சாதாரண கடைகள் வர்த்தக நிலையங்கள் பேக்கரிகள் நாளை திறக்கப்படும் எனினும் கடை உரிமையாளர்கள் சமூக இடைவெளி பேணப்படுகின்றதா கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்கின்றார்களா, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை பொறுப்பாக கடை உரிமையாளர்கள் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் எவ்விதம் நடந்து கொண்டாலும் கண்டிக்கக் கூடிய விடயங்கள் நடந்தால் அதற்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தமது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாவட்டத்தைப் பொறுத்தவரை 165 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் மூன்றாவது அலை கடந்த ஏப்ரலில் ஆரம்பித்ததன் பின்னர் இது வரையில் மாவட்டத்தில் 61பேர் மரணத்தை தழுவியுள்ளார்கள் எனவும் அரசாங்க அதிபர் தமது செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

No comments: