News Just In

6/20/2021 07:43:00 PM

மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையின் தற்போதை நிலை குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பிற மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப்பயிர்செய்கை செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்தவண்ணம் உள்ளமை தொடர்பில் அவதானங்களை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அவ்விடம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதியுடன் அங்கிருந்து சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் விலகிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, கடந்த மே 12ம் திகதி மீண்டும் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் கொரோனா நிலைமை காரணமாக வழக்கு பிற்போடப்பட்டிருந்தது.

இருப்பினும் அத்துமீறிய சேனைப்பயிர்ச்செய்கையாளர்கள் இதுவரை அங்கிருந்து முற்றாக விலகவில்லை எனவும் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவ்விடத்தை மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தும் பண்ணையாளர்களினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவ்விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வழக்கு விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைத் திரட்டும் பொருட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய விஜயம் அமைந்திருந்தது.

இதன் போது அத்துமீறிய சேனைப் பயிர்ச்செய்கையாளர்களின் தொடர் செயற்பாடுகள் நிலவுகின்றமை தொடர்பிலும், இன்னும் அவர்கள் முழுமையாக வெளியேறவில்லை என்பதும், பசளை பொருட்கள் அங்கு அடுக்கப்படடு இருப்பது போன்ற விடயங்களை அங்கு அவதானிக்க முடிந்ததாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன்போது அங்கு மகாவலி அபிவிருத்தி பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர். இவை தொடர்பில் அவர்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துiரையாடினர்.

தங்களால் இங்கு அவதானிக்க முடிந்த விடயங்கள் தொடர்பில் தாங்கள் வழக்காளிகள் என்ற அடிப்படையில் நீதிமன்றத்திற்கு தங்கள் சமர்ப்பணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இன்றைய இவ்விஜயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் உட்பட பலரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








No comments: