News Just In

6/16/2021 08:54:00 PM

இணையவழியாக மதுபானம் விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!!


நடமாட்டக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் இணையவழியாக (ஒன்லைன்) மதுபானம் விற்பனை செய்வதற்கு பிரபல சிறப்பங்காடிகளுக்கும், எவ்.எல் 4 அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இதனை செயற்படுத்துவதற்கு கொவிட் பரவலை தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுமதி பெற வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இதற்கான அனுமதி கிடைத்த பின்னர் இணையத்தளம் ஊடாக மது விற்பனை தொடர்பான தொழிநுட்ப இயலுமை உள்ள நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதியை வழங்கவும், அதற்கான நிபந்தனைகளை பகிரங்கப்படுத்தவும் மதுவரித் திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கொவிட் பரவலை தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுமதியை கோரி, அது தொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளதாகவும், இதற்கு அனுமதி இன்று கிடைக்குமாயின் நாளை முதல் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், ரிசர்வ் வகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை ஒரே தடவையில் 5 லீட்டர்களை மாத்திரமே வாங்கமுடியும்.

அத்துடன், பியர், கள், வைன் உள்ளிட்ட மதுபானங்களை 12 லீட்டர் வரை ஒரே தடவையில் கொள்வனவு செய்ய அனுமதியளிக்கப்படும்.

இந்த மதுபானசாலைகள் ஊடாக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியினுள் மாத்திரமே இணையத்தளம் ஊடாக மதுபானம் கொள்வனவு செய்யமுடியும்.

நடமாட்டத்தடை காரணமாக மதுபானசாலை திறப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மதுபான விற்பனைகள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையை கருத்தில் கொண்டு இணையம் ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான யோசனையை மதுவரி திணைக்களம் நிதி அமைச்சிக்கு முன்வைத்திருந்தது.

இதனையடுத்து, இணையம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய நிதியமைச்சு இன்று அனுமதி வழங்கியது.

இதேவேளை, நடமாட்டக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மதுவரி திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு 600 பில்லியன் ரூபாவுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

No comments: