News Just In

2/16/2021 05:54:00 PM

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2-ஆம் இடம்!!


சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லே என இருவரும் இந்திய பந்து வீச்சாளர்கள் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தனர்.

நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஜேக் லீச்சும் டக் அவுட்டானார். பின்பு மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் கேப்டன் ரூட்டும், லாரன்சும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இதில் லாரண்ஸ் 26 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 8 ரன்கள் சேர்த்திருந்தபோது அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார்.

இதன் பின்பு வந்த ஒல்லி போப் 12 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் அவுட்டானார். பின்பு விக்கெட் கீப்பர் போக்ஸூம் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாட வந்ததும் கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார் அக்ஸர் படேல். பின்பு ஒல்லி ஸ்டோனை டக் அவுட்டாக்கினார் அக்ஸர் படேல்.

தோல்வியின் விளிம்பில் இருந்தபோது இங்கிலாந்து அணியின் மொயின் அலி 5 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 18 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். ஆனாலும் கடைசியில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 164 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்தியா தரப்பில் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பின்பு அஸ்வின் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் எடுத்தனர். சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்ததற்கு இரண்டாவது டெஸ்ட்டில் பதிலடி கொடுத்தது இந்தியா. இப்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலை பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 69.7 சதவிகிதத்துடன், 460 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தி வருகிறது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக்கில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 9 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஆறு அணிகளோடு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.

அதில் மூன்று தொடர் சொந்த மண்ணிலும், மூன்று தொடர் அயல்நாடுகளிலும் விளையாட வேண்டும் என்பது நிபந்தனை. அந்த தொடர்கள் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர்களாக இருக்க வேண்டும். அதில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி வரும் ஜூன் 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவித்தது ஐசிசி.

No comments: