News Just In

11/06/2020 10:26:00 AM

டெல்லி அணியை 57 ஓட்டங்களினால் தோல்வியடையச் செய்து மும்பை அணி 6ஆவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது!!


டெல்லி அணியை 57 ஓட்டங்களினால் தோல்வியடையச் செய்து, மும்பை அணியானது ஆறாவது முறையாகவும் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியானான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மும்பைக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மாவும், குயின்டான் டிகொக்கும் களமிறங்கினர்.

ஓட்ட குவிப்பினை முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கியபோதும், 2 ஆவது ஓவரில் அஸ்வின் சுழலில் ரோகித் சர்மா டக்கவுட்டுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

2 ஆவது விக்கெட்டுக்கு டிகொக்குடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ஓட்டங்கள‍ை குவித்தது. ஓட்ட எண்ணிக்கை 78 ஓட்டங்களாக உயர்ந்த போது குயின்டான் டிகொக் 40 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் நடப்பு தொடரில் 4 ஆவது அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த பொல்லார்ட் அஸ்வின் சுழலில் சிக்கி எதுவித ஓட்டமுமின்றி பெவிலியன் திரும்பினார்.

இதனால் மும்பை அணி 12.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை குவித்து தடுமாறியது.

இந்த சூழலில் இஷான் கிஷனும், குருனல் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். எனினும் ஓரிரு ஓவர்களில் குருனல் பாண்டியா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து இஷான் கிஷனும், ஹர்திக் பாண்டியாவும் கைகோர்த்து இறுதி கட்டத்தில் வான வேடிக்கை காட்டினார்.

ரபடா, அன்ரிச் நார்ட்ஜேவின் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா தலா 2 சிக்சர்களை தெறிக்க விட்டு அசத்தினார். இதன் பின்னர் கடைசி பந்தில் இஷான் கிஷன் சிக்ஸரோடு மும்பை இந்தியன்ஸ் அணி 200 ஓட்டங்களை பெற்றது. இஷான் கிஷனும் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களை குவித்தது.

இஷான் கிஷன் 55 ஓட்டங்களுடனும், பாண்டியா 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டொய்னஸ், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் 201 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே மும்பை அணியின் வேகப் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அவரது ஓவரில் பிரித்வி ஷா டக்கவுட்டுடன் வெளியேற, அடுத்து வந்த ரஹானேயும் டக்கவுட்டுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷிகர் தவான் (0), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (12 ஓட்டம்) ஆகியோரை மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றினார்.

அதனால் டெல்லி அணி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. டெல்லி அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடிய மார்கஸ் ஸ்டொய்னஸ் (65 ஓட்டம், 6 பவுண்டரி, 3 சிக்சர்), அக்‌ஷர் பட்டேல் (42 ஓட்டம்) அணி 100 ஓட்டங்களை கடக்க உதவினர்.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 143 ஒட்டங்களை பெற்று 57 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், பொல்லார்ட் மற்றும் குருனல் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தோல்வி அடைந்தாலும் டெல்லி அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் நாளை மறுதினம் மோதும்.


No comments: