
இலங்கையில் தற்போது அச்சுறுத்தலாகப் பேசப்படும் கொறோனா வைரசுத் தாக்கம் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் சரியான தகவல்களையும் வழங்கும் நோக்குடன் கல்வியமைச்சினாலும் சுகாதார அமைச்சினாலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் அதிபர் திரு பயஸ் ஆனந்தராஜா தலைமையில் பழைய மாணவர்களின் Mich Professionals அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 30.01.2020 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மயக்கமருந்தியல் அதிதீவிர சிகிச்சை விசேட வைத்தியநிபுணரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர நிலைமைகளைக் கையாளும் மருத்துவக்குழுவின் பிரதான மருத்துவநிபுணர்களில் ஒருவரும் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி மதனழகன் அவர்கள் கலந்து கொண்டு கொறோனா வைரசுத் தாக்கம் தொடர்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியான தகவல்களை வழங்கியதுடன் மக்கள் எவ்வாறு தங்களை இவ்வாறான சுவாசத் தொற்றுக் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும் எனவும் விளக்கமளித்தார்.
குறிப்பாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆறு விடயங்களைப் பற்றி அவர் அழுத்திக்கூறியிருந்தார்.
1. காய்ச்சல், தடிமல், இருமல், சளி இருக்கும் போது மக்கள் கூடுகின்ற பொது இடங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
2. சவர்க்காரம் மற்றும் தண்ணீரினால் அல்லது அல்கஹோல் கொண்ட கைகழுவிகளால் அடிக்கடி கைகழுவும் கைச்சுகாதார பழக்கவழக்கத்தை நேர்த்தியாக கடைப்பிடிக்க வேண்டும்.
3. இருமும் போதும் தும்மும் போதும் திசு, கைக்குட்டை போன்றவற்றால் அல்லது முழங்கையை மடித்து வாயையும் மூக்கையும் மறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்திய திசு, கைக்குட்டை போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவதுடன் மேற்குறிப்பிட்டவாறு கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
4. காய்ச்சல், தடிமல், இருமல், சளி இருப்பவர்களுடன் நெருக்கமான தொடர்பைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
5. பொது இடங்களில் அளைந்த கைகளால் தேவையற்ற விதத்தில் நம்முடைய வாய், மூக்கு, கண் போன்றவற்றை தொடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தொடவேண்டி ஏற்படின் மேற்குறிப்பிட்டவாறு கைகளைக் கழுவிக் கொண்ட பின்னர் தொடுவது சிறந்தது.
6. காய்ச்சல், தடிமல், இருமல், சளி இருக்கும் போது மாத்திரம் அது குணமாகும் வரை மற்றவர்களுக்கு முன்னால் முகக்கவசம் அணிவது பொருத்தமானது. ஏனையவர்கள் சுவாசக் கிருமித்தொற்றுக்களிலிருந்து தம்மை பாதுகாக்க முகக்கவசம் அணிவதை விட கைச்சுகாதாரத்தை பேணுவதே சாலச்சிறந்தது.




No comments: