News Just In

1/30/2020 10:36:00 PM

காத்தான்குடி கடற்கரையில் பிளாஸ்ரிக் கழிவுகளை சேகரிக்க கவர்ச்சிகரமான திட்டம்!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையோரத்தை தூய்மையாகப் பேணும் பொருட்டு அங்கு கவர்ச்சிகரமான குப்பைக் கழிவு சேகரிப்பு யுக்தியைக் கையாண்டுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.

பரீட்சார்த்தமாக இன்று வியாழக்கிழமை (30) இந்த கழிவு சேகரிப்பு கவர்ச்சி பொறிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சூழலையும் சுற்றாடலையும் பசுமையும் தூய்மையும் மாறாமல் பேணிப் பாதுகாக்கும் விழிப்புணர்வுக்காக தான் துருக்கி, மலேசியா போன்ற நாடுகளில் பார்வையிட்ட கவர்ச்சிகரமான குப்பைக் கழிவு சேகரிப்பு யுத்தியைக் கையாண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அதனடிப்படையில் சிறுவர்களைக் கவரக் கூடிய வெளித் தெரியக் கூடிய மீன் வடிவக் கூடுகள் குப்பைக் கழிவுகளை சேர்க்கும் இடமாக கடற்கரையோரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களுடன் கழிவுகளையும் சேர்ப்பிக்கக் கூடிய கழிவுத் தொட்டிகள் காத்தான்குடி நகரசபையினால் நிறுவப்பட்டுள்ள போதிலும் அவற்றை பொழுபோக்காளர்கள் புறக்கணித்துவருவதனால் தான் இந்த யுக்தியைக் கையாண்டுள்ளதாகவும் இதனால் சிறுவர்கள் கவரப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், காத்தான்குடி நகர சபையில் பணியாற்றும் சுமார் 125 சுகாதார துப்புரவுத் தொழிலாளர்களில் பெரும்பாலானோரை கடற்கரையோரத்தைத் துப்புரவு செய்யும் பணிக்காக அமர்த்திய போதிலும் அதுவும் போதாத நிலை பண்டிகைக் காலங்களில் ஏற்படுகிறது.

காத்தான்குடி கடற்கரைக்கு வரும் பொழுது போக்காளர்கள் கடற்கரையில் அமர்ந்திருந்த வண்ணம் உண்டு குடித்து விட்டு உக்கக் கூடிய, உக்க முடியாத கழிவுகள் அனைத்தையும் கடற்கரையில் ஆங்காங்கே விட்டுச் செல்வதால் கடற்கரை மாசவடைத் தடுக்கும் விதமாக இந்த குப்பைத் தொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனை காத்தான்குடியிலுள்ள பாடசாலைகளில் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.

கடற்கரையைத் தமது பொழுதுபோக்கிற்காகவும் உல்லாசத்திற்காகவும் களி(ழி)க்க வருவோர் இந்த கழிவுகள் போடும் சிறப்பு ஏற்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு வழமைபோன்று தமது கைப்பட்ட கழிவுகளை கண்ட கண்ட இடத்தில் வீசிவிட்டுச் செல்வதால் அழகான கடற்கரையோரச் சூழல் பாழ்பட்டு சாக்கடையாக மாறுகிறது.

கடற்கரையில் ஆங்காங்காங்கே வீசியெறிப்படும் நாற்றக் கழிவுகளை உண்ண வரும் பறவைகள். விலங்குகள் அவற்றை அருகிலுள்ள கிணறுகள். குடியிருப்புக்கள், மரங்கள் போன்றவற்றிலும் கடலிலும் இழுத்துச் சென்று போட்டு விடுவதால் சூழலுக்கு மோசமான பாதிப்பு விளைகின்றன.

அத்துடன் சக மனிதர்களான நகரசுத்தித் தொழிலாளர்களும் சாக்கடைகளை அகற்றுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய பிளாஸ்ரிக் போத்தல்களும் கடற்கரையோரமெங்கும் வீசப்படுதல் உயிராபத்தை ஏற்படுத்துவதற்குத் தோதாய் அமைவதோடு கடற்கரையில் சிதறிக் கிடக்கும் பிளாஸ்ரிக் போத்தல்கள் காற்றில் உருண்டோடி கடலில் சேர்வதால் கடல் வளத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: